பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர் மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஸ்ரீராமபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட சுதந்திர பாளையாவில் வசிக்கும் கோபாலின் மகள் யாமினி பிரியா (20) பனசங்கரியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்தார்.

நேற்று காலை தேர்வு எழுத கல்லூரிக்கு சென்ற அவர், மதியம் தேர்வு முடித்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மதியம் 2 மணியளவில் மல்லேசுவரம் பகுதியில் உள்ள மந்திரி மாலின் பின்னால் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே நடந்து சென்ற போது, அங்கு வந்த வாலிபர் யாமினியை திடீரென வழிமறித்து தகராறு செய்துள்ளார்.

பின்னர், தனது கையில் இருந்த மிளகாய் தூளை யாமினியின் கண்ணில் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. கண் எரிச்சலால் யாமினி துடிதுடித்தபோது, வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கடும் காயம் அடைந்த யாமினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்து அருகில் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த ஸ்ரீராமபுரம் போலீசார், மாணவி யாமினியின் உடலை கைப்பற்றி மாயமான கொலையாளியை தேடி வருகின்றனர். விசாரணையில், கொலை செய்தவர் சுதந்திர பாளையாவைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்துள்ளது.

விக்னேஷ், யாமினியை காதலித்ததாகவும், ஆனால் யாமினி அதை மறுத்ததால் கோபமடைந்த அவர் முன்பும் தாலி கட்ட முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாமினி வீட்டுக்கு வருவதை முன்கூட்டியே அறிந்திருந்த விக்னேஷ், அவ்விடத்தில் காத்திருந்து ஆத்திரத்தில் கொடூரமாக தாக்கியதாக போலீசார் கூறுகின்றனர். தற்போது தலைமறைவாகியுள்ள விக்னேஷை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடிவருகின்றனர்.