பெங்களூருவில் நடந்த உண்மைக் கதை சினிமா கதை போல மாறியுள்ளது. விக்டோரியா மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் மகேந்திர ரெட்டி (31) தனது மனைவி டாக்டர் கிருத்திகா ரெட்டியை (28) தற்காலிக மயக்கத்திற்காக அறுவைச் சிகிச்சை அறைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் “ப்ரொபோஃபோல்” எனும் மருந்தை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்துள்ளார்.

இதனை இயற்கை மரணம் என காட்ட முயன்ற அவர், 6 மாதங்கள் கழித்து சிக்கியுள்ளார். கிருத்திகா ரெட்டி கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதி திருமணம் ஆனார். விக்டோரியா மருத்துவமனையில் இருவரும் பணியாற்றி வந்தனர். திருமணத்திற்குப் பிறகு சில மாதங்களில் கிருத்திகாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மேலும், மாமியார் வீட்டு கட்டுப்பாடுகள் மற்றும் வருமானத்தில் தலையீடு காரணமாக மனஅழுத்தத்துக்கு உள்ளாகியிருந்தார். இதனால் அடிக்கடி தந்தை வீட்டிற்கு சென்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத்தில் உடல்நிலை மோசமான கிருத்திகாவை, மகேந்திரர் தந்தை வீட்டிற்கு அழைத்துச் சென்று “சிகிச்சை தேவை” எனக் கூறியுள்ளார். அவர் கால் பகுதியில் ‘கேன்யூலா’ பொருத்தி, சில நாட்களுக்கு ஊசி போட வேண்டி இருப்பதாக கூறியுள்ளார். ஏப்ரல் 24-ஆம் தேதி இரவு அவர் தந்தை வீட்டில் தங்கிய போது, காலை நேரத்தில் கிருத்திகா மயக்க நிலையில் இருந்ததாக கூறி அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், மருத்துவர்கள் அவர் “இறந்து விட்டார்” என அறிவித்தனர்.

மகேந்திரர் இது இயற்கை மரணம் எனக் கூறி போலீசில் புகார் கொடுக்க வேண்டாம் எனக் குடும்பத்தாரை கேட்டுள்ளார். ஆனால் கிருத்திகாவின் அக்கா டாக்டர் நிகிதா ரெட்டி சந்தேகம் கொண்டார். அவர் அளித்த புகாரின் பேரில் மரதஹள்ளி போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில், உடல் உறுப்பு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. ஆறு மாதங்கள் கழித்து கிடைத்த ஃபோரன்ஸிக் அறிக்கையில், தடை செய்யப்பட்ட மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டதால் மரணம் ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார், மணிப்பாலுக்கு தப்பிச் சென்ற மகேந்திர ரெட்டியை கைது செய்தனர். அவர் அறுவைச் சிகிச்சை மருந்துகளை தவறாக பயன்படுத்தி கொலை செய்தது வெளிச்சம் கண்டுள்ளது. மேலும், அவரது குடும்பத்தினருக்கு முந்தைய குற்றப்பின்னணி இருப்பதும் தெரியவந்துள்ளது.

மகேந்திரரின் இரட்டை சகோதரர் நாகேந்திர ரெட்டிக்கு ஏற்கனவே பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், திருமணத்தின் போது இதை கிருத்திகா குடும்பத்திடம் மறைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூருவை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவம், மருத்துவ வட்டாரத்திலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.