பெங்களூருவைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி, கர்நாடக அரசின் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்துள்ளார். தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடக அரசு மாநிலம் முழுவதும் சமூக அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சுதா மூர்த்தியிடம் சாதி விவரம் கேட்கப்பட்டபோது, அவர் தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுதா மூர்த்தி தனது அறிக்கையில், “நாங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாததால், எங்கள் குடும்பத்தின் சாதித் தகவல் இந்தக் கணக்கெடுப்பில் அரசுக்கு உதவாது” என தெரிவித்தார்.

மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார். இதனை கர்நாடக அரசு மதித்து, சுதா மூர்த்தியின் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளது. சுதா மூர்த்தியுடன் அவரது கணவர் நாராயண மூர்த்தியும் இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மாநில தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட், “சுதா மூர்த்தி பங்கேற்க மறுப்பது அவரது தனிப்பட்ட முடிவு. அரசு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது” என கூறினார். மேலும், “மத்திய அரசின் கணக்கெடுப்பிலும் அவர் இதேபோலவே பேசுவார் என்று நம்புகிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேபோல், துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும், “இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்பது முற்றிலும் தன்னார்வ அடிப்படையில் நடைபெறும் ஒன்று. அரசு எந்த நபரையும் கட்டாயப்படுத்தாது” எனத் தெரிவித்துள்ளார். அரசு நடத்திய இந்தக் கணக்கெடுப்பில் சுதா மூர்த்தி போன்ற பிரபலங்கள் பங்கேற்க மறுத்தது, மாநில அரசியல் வட்டாரத்தில் கலந்துரையாடலை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அரசு செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கிய இந்த சாதிவாரி கணக்கெடுப்பை அக்டோபர் 19-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. மாநிலத்தின் மக்கள் தொகை மற்றும் சமூகப் பிரிவுகளை துல்லியமாக பதிவு செய்வதே இதன் நோக்கம். ஆனால் இதற்கிடையில் சுதா மூர்த்தி எடுத்த முடிவு, “சாதி அடையாளத்தைத் தாண்டி மனிதாபிமானம் முக்கியம்” என்ற அவரது பழைய நிலைப்பாட்டை மீண்டும் நினைவுபடுத்திவருகிறது.