சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, விலங்கு நலன் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்புகிறது. வீடியோவில், ஒரு சாலையில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த நாயை, ஒரு சிறுவன் அதன் காலை பிடித்து திடீரென உயரத்துாக்கி சுற்றியுள்ளார்.

அதிர்ச்சியிலும் பயத்திலும் அந்த நாய் அலறுவதைக் கேட்டு நெஞ்சம் பதறும் நிலையில் உள்ளது. ஆனால் அந்த சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள், இதனை நகைச்சுவையாக காண்பது போன்ற காட்சிகள் மிகவும் வேதனையை ஏற்படுத்துகின்றன.

வீடியோவில், அந்த சிறுவன் நாயை தூக்கி அதன் காலை பிடித்து வேகமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார். நாயின் அலறலையும் போராட்டத்தையும் காணக்கூடிய இந்தக் காட்சியில், அருகில் உள்ள மற்ற இளைஞர்கள் காமிரா பிடித்து சிரித்து ரசிப்பது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதுவே சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

 

பலர், “இப்போது ஒரு நாயை இப்படிச் செய்கிறான், நாளை மனிதரிடம் என்ன செய்வான்?” எனக் கடுமையாக விமர்சித்துள்ளனர். “இவன் செய்யும் செயலுக்கு நரகத்தில் தான் இடம் உண்டு” எனக் கூறியவாறும், “இத்தகைய செயலை உற்சாகமாகச் செய்த அந்தக் குழுவுக்கும் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.