மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படித்து வந்த 23 வயதான ஒடிசாவை சேர்ந்த பெண் மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தனது ஆண் நண்பருடன் வெளியே சென்றபோது, மர்மக் கும்பலால் கடத்தப்பட்டு, மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் உள்ள ஒதுக்குப்புற இடத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விரைவாக விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மேலும், இருவர் தப்பிச் சென்ற நிலையில், அவர்களையும் பிடிக்க விரிவான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு முறை, மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் ஒரு பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் மருத்துவக் கல்வி நிலையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது மாநில அரசின் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தியுள்ளன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இது தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்த சம்பவம். மாணவி இரவு 12.30 மணிக்கு வெளியே சென்றது எப்படி? கல்லூரி நிர்வாகமும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. பெண்களும் தங்களை பாதுகாக்கும் பொறுப்பு உடையவர்கள்” எனக் கருத்து தெரிவித்தார்.
அத்துடன், “மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தப்பிக்க முடியாது. ஒவ்வொரு தவறும் அரசை குறிவைப்பது முறையல்ல. மணிப்பூர், உ.பி., பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் நடக்கும் பாலியல் குற்றங்களை ஒப்பிட்டு பாருங்கள். நாங்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்” என கூறிய மம்தாவின் பதில்கள் அரசியல் வட்டாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளன.
