மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தைகள் இருமல் வருத்தத்துக்காக கொடுக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’ என்ற மருந்தை குடித்ததையடுத்து, மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவிலும் இதே மருந்து வழங்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலங்களிலும் உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த மருந்தை தயாரித்தது, சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வந்த ஸ்ரேசன் பார்மா என்ற நிறுவனம். குழந்தைகள் மரண வழக்கை விசாரிக்க மத்தியப் பிரதேச மாநில தனிப்படை போலீசார் நடவடிக்கையில் இறங்கி, மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் (75) என்பவரை சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்தை தயாரித்த ஶ்ரீசன் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.