சென்னை திருவான்மையூரை சேர்ந்த வழக்கறிஞர் கவுதம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார். அந்த வழக்கில் திமுக பிரமுகரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான குணசேகரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் இருந்து சமீபத்தில் வெளிவந்த குணசேகரன், நேற்று மாலை தனது நண்பர்களுடன் அடையாறு வழியாக காரில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது அடையாறு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரது காரை திடீரென நிறுத்தியது. அதிர்ச்சியடைந்த குணசேகரன் கும்பலிடமிருந்து தப்பிக்க சாலையில் ஓடினார்.

ஆனால் அந்த கும்பல் அவரை பின்தொடர்ந்து துரத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். முகம் முழுவதும் சிதைந்த நிலையில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த அடையாறு போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், வழக்கறிஞர் கவுதம் கொலைக்குப் பழி வாங்கும் நோக்கத்திலேயே குணசேகரன் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்