மதுரையில் வேலம்மாள் கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன், சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில், வேலம்மாள் மருத்துவமனை அருகே 11½ ஏக்கர் நிலத்தில், ரூ.325 கோடி செலவில் சர்வதேச தரத்தில் ஒரு பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் பயிற்சி ஆடுகளங்கள், வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ், கார் பார்க்கிங் மற்றும் மழைநீர் விரைவாக வெளியேற வடிகால் வசதிகள் உள்ளன.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வல்லுநர்களின் ஆலோசனையுடன் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 20,000 ரசிகர்கள் அமரும் வகையில் கேலரி திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக 7,300 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்தை கண்காணிக்க 197 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய கிரிக்கெட் மைதானத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி அக்டோபர் 10, 2025 அன்று திறந்து வைத்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர், “தோனி… தோனி” என ஆரவாரம் செய்தனர். ஸ்டேடியத்தை திறந்த பிறகு, தோனி காரில் மைதானத்தை வலம் வந்து, பேட் ஏந்தி களத்தில் இறங்கினார். அப்போது நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் இடம்பெற்ற “அந்த ஆகாயம் போதாத பறவை” பாடல் ஒலிக்க, ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷமிட்டனர். இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.