சிங்கப்பூரில் திருப்பதி மோகன்தாஸ் (41), கட்டுமான தொழிலாளராக பணியாற்றி வந்தார். கடந்த மே மாதத்தில் நடந்த சம்பவம், தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் வசித்து வந்த வீட்டில், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த மோகன்தாஸ், பின்னர் அத்துமீறி உள்ளே நுழைந்து, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக தெரிகிறது. ஆனால், அந்த பெண் உரத்த குரலில் கூச்சலிட்டதால், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் நடந்த 2 நாட்கள் கழித்து, மீண்டும் அதே இடத்திற்கு சென்ற மோகன்தாஸை, அந்த பெண் மீண்டும் பார்த்ததால் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் சிங்கப்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்து மோகன்தாஸை கைது செய்தனர்.
விசாரணையின் போது, சம்பவம் குறித்து மோகன்தாஸ் முழுமையாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுவே முதல் குற்றம் என்பதையும், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையும் கருத்தில் கொண்டு, மோகன்தாஸுக்கு 13 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
சிங்கப்பூர் போன்ற நாட்டு சட்டங்கள் மிகவும் கடுமையானவை என்பதையும், இவ்வாறு சட்டத்தை மீறினால் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் கடுமையான தண்டனை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
