ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் இந்தியா–பாகிஸ்தான் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. விவாதத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் நிரந்தர பிரதிநிதி சைமா சலீம், “காஷ்மீரில் பல தசாப்தங்களாக பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதற்கு கடுமையாக பதிலளித்த இந்திய நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், பாகிஸ்தானை நேரடியாக குற்றம் சாட்டி, அதன் இரட்டை நிலையை வெளிச்சமிட்டார். அவர் உரையில் கூறியதாவது: “ஒவ்வொரு ஆண்டும், நமது நாட்டை குறிவைத்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பாகிஸ்தானிடமிருந்து இப்படிப்பட்ட தவறான அறிக்கைகளை கேட்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது ‘ஆபரேஷன் சர்ச்லைட்’ என்ற பெயரில் 4 இலட்சம் பெண்கள் மீது கூட்டுப் பாலியல் வன்முறை நடத்தியது இதே நாடுதான்.

தனது சொந்த குடிமக்கள்மீது குண்டுவீசி திட்டமிட்ட இனப்படுகொலை மேற்கொண்டதும் இதே நாடு. இன்று உலகமே அதன் இரட்டைத் தரத்தையும், போலியான மனித உரிமை பிரசாரத்தையும் நன்கு அறிந்துள்ளது. இப்போது அந்த நாடு தன்னை ‘மனித உரிமைகளின் பாதுகாவலர்’ என்று சித்தரிக்க முயற்சிப்பது பரிதாபகரமானது. பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற துறையில் இந்தியாவின் பங்களிப்பு எந்த அளவிலும் குறைபாடற்றது; இது உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகும்,” என்று தெரிவித்தார்.