வியட்நாமின் ஹனோய் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பெட்ரோல் பம்பில் மோதி, பயங்கர தீ விபத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம் CCTV-யில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செப்டம்பர் 20 அன்று நடந்த இந்த விபத்தில், பெட்ரோல் நிரப்புவதற்காக வரிசையில் நின்ற கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பம்பில் மோதியதால், அங்கிருந்த எந்திரம் ஒரு ஊழியரின் மீது விழுந்து, அவரது கால்களில் தீ பற்றியது.

இதனால், வரிசையில் இருந்த இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இந்த பரபரப்பான தருணங்கள் பெட்ரோல் பம்பின் CCTV-யில் பதிவாகி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, தீயில் சிக்கிய ஊழியர் உடனடியாக தன்னை விடுவித்து, பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்தார். அவரது கால்களில் தீ பற்றியிருந்தாலும், உயிருக்கு ஆபத்து இல்லை என வீடியோவின் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனடியாக, பெட்ரோல் பம்பில் இருந்த மற்ற ஊழியர்கள் தீயை அணைக்க ஓடி வந்து, பெரும் சேதத்தை தடுத்தனர்.

இந்த சம்பவம், பெட்ரோல் பம்புகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இதேபோல், தெலங்கானாவின் சித்திபேட்டில் பைக் ஒன்று பெட்ரோல் நிரப்பும்போது தீப்பற்றிய சம்பவமும் சமீபத்தில் நடந்து, இதுபோன்ற விபத்துகளின் அதிகரிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.