காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் நடந்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான் சையத் (31) என்ற தொழிலாளி, தனது மனைவி பரிதாபேகத்துடன் (31) இணைந்து வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தனர்.
ஆனால், இம்ரானுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், ஆத்திரமடைந்த பரிதாபேகம், காய் வெட்டும் இரண்டு கத்திகளால் அவரை மாறி மாறி குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இம்ரான், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் ஒரகடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், பரிதாபேகம் முன்னர் இக்பால் என்பவரை திருமணம் செய்து பிரிந்து, பின்னர் இம்ரானுடன் இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
இம்ரானின் வேறு தொடர்பு குறித்து பலமுறை எச்சரித்தும் அவர் புறக்கணித்ததால், தூங்கிக் கொண்டிருந்த இம்ரானை பரிதாபேகம் வயிறு, தலை உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் குத்தியதாக விசாரணையில் தெரிகிறது.
இதையடுத்து, ஒரகடம் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து, பரிதாபேகத்தை கைது செய்தனர். தற்போது இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
