சென்னை அக்கரையில் நேற்று நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அக்டோபர் மாதம் தொடக்கம் தமிழகத்தின் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் பாஜக தலைவரும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவித்தார். மாவட்டங்களைத் தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் சமுதாய தலைவர்கள் சந்திப்புகள் நடைபெறும். நாள்தோறும் மூன்று இடங்களில் தேர்தல் பிரசாரத்தையும், இரு இடங்களில் நேரடி வாக்காளர் சந்திப்பையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு நாளும் ஒரு பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பங்கேற்று மக்களிடம் பேசுவார் என கூறினார்.
அதே நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பரப்புரை சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், அதில் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக மக்கள் திரளாக கலந்து கொள்வதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். இந்த சுற்றுப்பயணங்களில் பாஜக தொண்டர்களும் உற்சாகமாக பங்கேற்று வருகின்றனர் என்றார். எடப்பாடியின் பேச்சு, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையிலும், பாஜகவின் பங்களிப்பை பாராட்டும் வகையிலும் இருந்தது என்று அவர் கூறினார்.
அதிமுக மற்றும் பாஜக இடையே கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட விரிசல் தீர்ந்ததா என சந்தேகம் எழுந்தாலும், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் திட்டம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, “அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக” என எடப்பாடி பழனிசாமி கூறியது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் செய்தியாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்வரும் தேர்தலில் NDA கூட்டணியின் ஒற்றுமை மீண்டும் வலுப்பெறக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
