பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது ‘முகவரி மோசடி’ செய்ததாக பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
“அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், அவர் மாமல்லபுரத்தில் கூட்டிய செயற்குழு செல்லாது. தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் தி.நகர் முகவரிக்கு சென்றது போல நடிக்க முயற்சிக்கப்படுவதாகவும், இது ஒரு மோசடி” என அவர் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, அன்புமணியின் ஆதரவாளரும் வழக்கறிஞருமான பாலு, அதனை முழுமையாக மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்கறிஞர் பாலு கூறியதாவது: “25 ஆண்டுகள் கட்சித் தலைவராக இருந்த ஜி.கே.மணிக்கு திடீரென்று ‘முகவரி மோசடி’ புரிந்தது என்பது நம்பிக்கைக்குரியதல்ல. அன்புமணி ராமதாஸ் 2022ஆம் ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, 2022 ஜூன் 1ஆம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு நம்பர் 10, திலக் தெரு, தி.நகர் என்ற முகவரியைத் தலைமை அலுவலகமாக மாற்றியதாக அதிகாரப்பூர்வ கடிதம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உறுப்பினர் அட்டைகள், பத்திரிகை அறிக்கைகள் என அனைத்து கட்சிச் செயல்பாடுகளும் தி.நகர் முகவரியை கொண்டே நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் கூட கட்சிக்கான அனைத்து அறிவிப்புகளையும் அதே முகவரிக்கே அனுப்பி வருகிறது” என்றார்.
மேலும், “அன்புமணிக்கு எதிராக மொத்தம் 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ‘முகவரி மாற்றம்’ குறித்த குற்றச்சாட்டும் ஒரு பழைய விஷயம். புதிய செய்தியாக அதை முன்வைத்து பரபரப்பு ஏற்படுத்துவது வேண்டுமா? 63 நாட்டு முத்து நாய்க்கன் தெரு முகவரியை இப்போது சொல்லும் ஜி.கே.மணி, தைலாபுரம், விழுப்புரம் மாவட்டம் என இருந்த உறுப்பினர் அட்டையை ஏன் தானே தூக்கிப் பிடித்து வெளியிட்டார்?
இது வேறு யாரும் தெரியாமலா நடந்தது? ஏற்கனவே பொதுமக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் தலைமையக மாற்றம் குறித்து தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்தது” எனக் கூறி, ஜி.கே.மணி கூறும் குற்றச்சாட்டு பழையதையும், பின்னணியற்றதுமான அரசியல் நடவடிக்கையேயும் பிரதிபலிப்பதாக விமர்சித்தார்.
