தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ‘மக்கள் சந்திப்பு பிரசாரம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.

இந்த பிரசாரத்தின் முதற்கட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து தொடங்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு விஜய் சென்று பொதுமக்களுடன் நேரடியாக சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில், வரும் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) இந்த பிரசாரத்தின் இரண்டாம் கட்ட பயணம் நாகையில் நடைபெறவுள்ளது.

கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் ஆகிய ஏழு இடங்களில் பிரசாரம் நடத்த அனுமதி கோரி மாவட்ட போலீசாரிடம் தமிழக வெற்றிக்கழகத்தினர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் புத்தூர் ரவுண்டானா பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இதில் போக்குவரத்து தடை ஏற்படக்கூடாது, பொதுசொத்துகள் மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கோவையில் அடுத்த மாதம் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் விஜய் தனது பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். இதற்கான முன் அனுமதியை கோரி த.வெ.க. நிர்வாகிகள் கோவை மாநகர காவல் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதன்மூலம், தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் விஜயின் பிரசாரம் தினம் தினமாக வலுப்பெற்று வருகிறது.