திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் (50) என்ற பாதிரியார், ஆதரவற்ற குழந்தைகளுக்காக காப்பகம் நடத்தி வந்தார்.
தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளை தங்கவைத்து, அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்து வந்த இவர், 2022 டிசம்பரில் காப்பகத்தில் தங்கியிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் மனமுடைந்த சிறுமி, உடல்நலக்குறைவு காரணமாக வீட்டுக்குச் சென்று, தனது தாயிடம் நடந்ததை விவரித்தார்.
இதையடுத்து, சிறுமியின் தாய் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆண்ட்ரூசை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கோகிலா, ஆண்ட்ரூசுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
