சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த செல்வம்-ஜெயந்தி தம்பதியின் மகள் நிர்மலாவுக்கு, 2018-ல் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சற்குணம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது 75 சவரன் தங்க நகைகளும், 5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களும் சீதனமாக வழங்கப்பட்டன. ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே சற்குணமும் அவரது குடும்பத்தினரும் நிர்மலாவை பணம் மற்றும் நகைகள் கேட்டு கொடுமைப்படுத்தினர். 2020-ல் நிர்மலாவின் தந்தை செல்வம் இறந்தார். அதே ஆண்டு நிர்மலாவுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு, சற்குணம் நிர்மலாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் தவிர்த்தார்.

பின்னர், இரு வீட்டு பெரியவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிர்மலாவை கோவைக்கு அனுப்பினர். ஆனால், சற்குணம் மீண்டும் குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டும் என்ற காரணத்தைக் கூறி நிர்மலாவை தாய் வீட்டுக்கு அனுப்பினார். பின்னர், நிர்மலா தன்னை அழைத்துச் செல்லும்படி கேட்டபோது, சற்குணம் “நிவாஸ் என்ற நபருடன் பேசி பழகினால் மட்டுமே உன்னை வீட்டுக்கு அழைப்பேன்” என்று மன உளைச்சல் தரும் வகையில் பேசினார். இதனால் வேதனையடைந்த நிர்மலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, 2023-ல் சற்குணம் நிர்மலாவிடமிருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். 2025 ஜனவரியில், நிர்மலா தனது குழந்தையுடன் பீளமேடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, குழந்தையை பள்ளியில் சேர்த்தார்.

நிர்மலாவின் தாய் ஜெயந்தி, தனது மகளை அவள் கணவனுடன் சேர்த்து வைக்கும் எண்ணத்துடன் கோவை வந்தார். அப்போது, சற்குணம் தனது பெற்றோர் மற்றும் சில அடியாட்களுடன் நிர்மலாவின் வீட்டுக்கு வந்து தகராறு செய்தார். அவருடன் வந்தவர்கள் ஜெயந்தியிடம் அநாகரிகமாக பேசி, பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சித்தனர். இதைப் பற்றி நிர்மலா காவல்துறையில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிர்மலாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நிர்மலா தரப்பில் கூறப்படுகிறது.