மதுரை செல்லூர் பகுதியில், வரதட்சணை கொடுமையால் ஒரு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ரூபன்ராஜ் என்பவருக்கும் பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண நேரத்தில் மணமகன் வீட்டார் 300 பவுன் நகையை வரதட்சணையாக கோரிய நிலையில், பெண் வீட்டார் 150 பவுன் நகை மட்டும் வழங்கியதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு மேலும் 150 பவுன் நகை தர வேண்டும் என  தொடர்ந்து மனதளவிலும், வார்த்தைகளாலும் துன்புறுத்தியதாக பிரியதர்ஷினியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்த கொடுமைகளால் மனமுடைந்த பிரியதர்ஷினி தனது கணவரை விட்டு பிரிந்து, தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில், அவர் தூக்குமாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவரது தற்கொலை குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன் மற்றும் மாமியார் தனபாக்கியம் ஆகியோருக்கு எதிராக மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், வரதட்சணை கொடுமை இன்னும் நிறைவடையவில்லை என்பதற்கான சாட்சியமாக சமூகத்தில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.