கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக பணியாற்றி வந்த உதயகுமார், விவாகரத்து வழக்கில் விசாரணைக்காக வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

பாதிக்கப்பட்ட பெண், கொல்லம் மாவட்ட நீதிபதியிடம் முறையிட்டதையடுத்து, புகார் கேரள உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பேரில், தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி உதயகுமார் கொல்லம் வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், புதிய அறிவிப்பு வரும் வரை எந்தவித நீதித்துறை பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், விசாரணை அறிக்கையை பரிசீலித்த கேரள உயர்நீதிமன்றம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு நிலவிய நீதிபதி உதயகுமாரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது.