பீகாரின் பெகுசராய் ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு சிறுமிகள், மேம்பாலத்தை பயன்படுத்தாமல், ரயில் தண்டவாளங்கள் வழியாக பிளாட்ஃபார்மை கடக்க முயன்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கூட்ஸ்வண்டி ஒன்று வந்தது. உஷாராக இருந்த அந்த சிறுமிகள், உடனடியாக தண்டவாளத்தின் நடுவில் படுத்துக்கொண்டனர். ரயில் அவர்கள் மீது பயணித்தபோதும், எந்த காயமும் இன்றி அதிசயமாக உயிர் தப்பினர்.
ரயில் முழுவதுமாக கடந்த பிறகு, நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து, உடனடியாக சிறுமிகளை பாதுகாப்பாக மீட்டனர். இதையடுத்து, ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சிறுமிகளுக்கு எச்சரிக்கை விடுத்து விடுவித்ததாக தெரிவித்துள்ளது.
பெகுசராய் நிலையத்தில் இரண்டு மேம்பாலங்கள் இருந்தாலும், பயணிகள் தண்டவாளம் கடப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுவதாக ரயில்வே காவல்துறை ஆய்வாளர் அரவிந்த் குமார் சிங் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, மும்பையில் நலசோபாரா நிலையத்தில் காவலர் கணேஷ் ராவுல் (32), மேம்பாலத்தை தவிர்த்து தண்டவாளம் வழியாக கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம், இதுபோன்ற ஆபத்துகளை மீண்டும் நினைவூட்டுகிறது.
