உத்திரப் பிரதேசம், நொய்டா பகுதியில் நடந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபின் என்ற நபர் தனது மனைவி நிக்கியிடம் ரூ.36 லட்சம் வரதட்சணை கோரியதாக கூறப்படுகிறது. இதை வழங்காததால், அவர் மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் நிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொடூரக் கொலை சமூகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணைக்காக மனைவியை எரித்த கணவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்து விபினை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 24) விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விபின் தப்பிச் செல்ல முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரை போலீசார் காலில் சுட்டு கட்டுப்படுத்தினர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
