மத்தியப் பிரதேச மாநிலம், கார்கோன் மாவட்டத்தில் உள்ள கர்ஹி நகர் பகுதியில் ஆகஸ்ட் 22ஆம் தேதி ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. மாலை சுமார் 4:30 மணியளவில், கடையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி மீது 5 முதல் 6 தெரு நாய்கள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது. ‘ரெஸ்ட் ஹவுஸ் ரோடு’ என்ற பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், நாய்களில் ஒன்று சிறுமியின் காலில் கடித்துள்ளது. திடீரென வந்த இந்த தாக்குதலால் பயந்த சிறுமி ஓட முயன்றபோது தடுமாறி விழுந்தார். இதனை தொடர்ந்து நாய்கள் மேலும் தாக்க முயன்றன.

 

சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அருகிலிருந்த கடைக்காரர்கள் விரைந்து வந்து நாய்களை விரட்டியுள்ளனர். இந்த பரபரப்பான சம்பவம் அங்கு இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பாதுகாப்பிற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.