தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவரும் நிலையில், வரும் 25ஆம் தேதி ஒடிசா–மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால், குறைந்த நிலப்பகுதிகளில் தண்ணீர் தேங்குதல் மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.