தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 10ம் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிஷேந்திரா என்ற 10ம் வகுப்பு மாணவன், ஒரு நாளுக்கு 10 மணி நேரத்துக்கும் மேலாக PUBG விளையாட்டில் முழுமையாக மூழ்கியுள்ளார். பள்ளிக்குச் செல்லவே வேண்டாம் என முடிவு செய்து, முழு நேரத்தையும் விளையாட்டுக்காக செலவிட்டதால், அவரது பெற்றோர் கவலையடைந்தனர்.
தங்களின் மகன் செயல்பாடுகளைப் பார்த்த பெற்றோர், மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், மாற்றம் இல்லாத நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் ரிஷேந்திராவின் மொபைலை பறித்துவைத்தனர். இதனால் அதிகமான மனஉளைச்சலில் இருந்த ரிஷேந்திரா, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திடீரென நிகழ்ந்த இச்சம்பவம் அவரது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2022ஆம் ஆண்டு PUBG உள்ளிட்ட பல்வேறு சீன ஆன்லைன் விளையாட்டுகள் மீது மத்திய அரசு தடை விதித்திருந்தாலும், 2023 மே மாதத்தில் அந்த தடை நீக்கப்பட்டது. தற்போது மீண்டும் இவ்விளையாட்டு இளைஞர்களை ஆட்டிப்படைக்க ஆரம்பித்திருப்பது, பல பெற்றோர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
