உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், 21 வயது பிபிஏ மாணவி வைஷ்ணவி சாகு, கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் வழியில் தெரு நாய்களின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி, முகத்தில் பலத்த காயங்களுடன் 17 தையல்கள் போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 20 அன்று, ஷியாம் நகர் பகுதியில் தெரு நாய்களும் குரங்குகளும் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென மூன்று நாய்கள் மாணவி வைஷ்ணவி மீது பாய்ந்தன. அலன்ஹவுஸ் ரூமா கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் இவர், நாய்களால் தரையில் இழுத்து வீழ்த்தப்பட்டு, முகத்திலும் உடலிலும் கடுமையாக கடிக்கப்பட்டார். அவரது வலது கன்னம் இரண்டாக பிளவுபட்டு, மூக்கு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் கடி காயங்கள் ஏற்பட்டன.

வைஷ்ணவியின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் குச்சிகளுடன் ஓடி வந்து நாய்களை விரட்டினர். ஆனால், அதற்குள் அவர் கடுமையாக ரத்தம் வடிந்த நிலையில் இருந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் வந்து, கான்ஷிராம் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்,

அங்கு அவரது கன்னத்திலும், மூக்கிலும் 17 தையல்கள் போடப்பட்டன. வைஷ்ணவியின் மாமா அசுதோஷ், “எனது மறைந்த சகோதரர் வீரேந்திர ஸ்வரூப் சாகுவின் மகள் வைஷ்ணவி, இந்த பயங்கர சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்,” என்று வேதனை தெரிவித்தார்.

தற்போது அவரால் உணவு உண்ணவோ, வாயை அசைக்கவோ முடியவில்லை, திரவ உணவை மட்டுமே குழாய் மூலம் உட்கொள்கிறார். அரசு உடனடியாக தெரு நாய்களை கட்டுப்படுத்தி, பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுப்ப வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.