மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்க வந்துள்ளனர். ஆனால், மாநாட்டில் நிகழ்ந்த திருட்டு சம்பவங்கள் பங்கேற்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

மாநாட்டிற்கு வந்த ஒரு பெண், தண்ணீர் வாங்குவதற்காக கூட்டத்தில் இருந்தபோது, தனது மணி பர்ஸ் திருடப்பட்டதாகவும், அதில் பணம் மற்றும் ஏடிஎம் கார்டு இருந்ததாகவும் ஆதங்கத்துடன் தெரிவித்தார். இதேபோல், அடுத்த 10 நிமிடங்களில் மற்றொருவரின் பணமும், இன்னொருவரின் ஸ்மார்ட்போனும் திருடப்பட்டதாக கூறியுள்ளார்.

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்து வரிசையாக நிற்க வைத்து தண்ணீரை விநியோகிக்குமாறு அறிவுறுத்தியும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை என்று அந்த பெண் கூறியுள்ளார். மேலும், திருட்டு குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க முயன்றபோது, கட்சியினர் இருக்கும் இடத்திற்கு காவலர்கள் வர மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பெண் அளித்த இந்த பேட்டி X தளத்தில் வெளியாகி வைரலான நிலையில் மாநாட்டு நிர்வாகிகள் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.