ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அஸ்பரி மண்டல் கிராமத்தில் உள்ள ஒரு குட்டையில் குளிக்கச் சென்ற 6 பள்ளி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்குச் செல்லாமல், 7 மாணவர்கள் குட்டையில் குளிக்கச் சென்றனர். இதில் 6 மாணவர்கள் குட்டையில் குளித்துக் கொண்டிருந்த போது, ஒரு மாணவன் மட்டும் கரையில் அமர்ந்திருந்தார். குளித்துக் கொண்டிருந்த மாணவர்கள் திடீரென தண்ணீரில் மூழ்கியதால், கரையில் இருந்த மாணவன் அதிர்ச்சியடைந்து கிராமத்திற்கு ஓடிச் சென்று தகவல் தெரிவித்தார்.
கிராம மக்கள் உடனடியாக குட்டைக்கு விரைந்து மாணவர்களை மீட்க முயற்சித்த போதிலும், ஆறு மாணவர்களும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
