டெல்லி-என்சிஆர் பகுதிகளில் தெருநாய்களை காப்பகங்களுக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது. தெருநாய்கள் கடித்து பலர் இறந்ததால் இந்த முடிவு சரி என சிலர் கூறினாலும், பலர் அதை எதிர்த்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட குரங்கு – நாய் நேர்காணல் வீடியோ ஒன்று வைரலாகி, அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது.
இந்த வீடியோவில், இந்தியா கேட் முன் குரங்கு ஒரு நாயை நேர்காணல் செய்வது போல் காட்சி அமைந்துள்ளது. அதில் குரங்கு, “உச்ச நீதிமன்ற தீர்ப்பை பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என கேட்க, நாய், “இந்த முடிவு முற்றிலும் தவறு. எங்களுக்கும் உணர்வுகள் உண்டு. எங்களை வலுக்கட்டாயமாக அனுப்புவது சரியல்ல” என்று பதிலளிக்கிறது. அடுத்த கேள்வியில், “நீங்கள் மனிதர்களைக் கடிக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்” என குரங்கு கேட்டபோது, அதற்கு நாய், “டெல்லியில் நாய் கடிப்பதை விட பாலியல் வன்கொடுமையால் அதிகம் பேர் இறக்கிறார்கள். அப்படியென்றால் மனிதர்களையே டெல்லியிலிருந்து விரட்டப் போகிறீர்களா?” எனக் கேட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறது.
मंकी दादा ने डोगेश भाई का इंटरव्यू किया… देखो आप सब भी #straydogs pic.twitter.com/4c9ODEC6ri
— Prerna Yadav (@prerna_yadav29) August 13, 2025
“>
வீடியோவின் இறுதியில், குரங்கு “இப்போது உங்கள் திட்டம் என்ன?” எனக் கேட்க, நாய், “முழு நாய் சமூகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும். உச்ச நீதிமன்றம் தனது முடிவை திரும்பப் பெற வேண்டும்” எனக் கூறுகிறது. இந்த AI வீடியோவை @prerna_yadav29 என்ற பயனர் X – தளத்தில் பகிர்ந்துள்ளார். “குரங்கு தாதா டோகேஷ் பாயை நேர்காணல் செய்தார்” என்ற தலைப்பில் வெளியான இந்த வீடியோ ஏற்கனவே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது. நெட்டிசன்கள், “அற்புதமான நேர்காணல்” என்று சிரிப்புடன் பகிர்ந்து வர, சிலர் “நாயின் வார்த்தைகளில் உண்மை இருக்கிறது” என்று கூறி கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
