தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷனின் 15 வது ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டார். அப்போது விழாவில் பேசியவர் கூறியதாவது, சனாதன சங்கிலிகளை அடித்து நொறுக்கும் ஒரே ஆயுதம் கல்விதான் என்று கூறினார். இவரது இந்த பேச்சுக்கு தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் இடத்தில் இருந்து பெரிய வரவேற்பு கிடைத்தது. பலரும் அவருக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர். இந்நிலையில் கமலின் அந்த பேச்சு சனாதனவாதிகளிடம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் நடிக்கும் நடிகர் ரவிச்சந்திரன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் சனாதனம் பற்றி பேசினால் கமலின் சங்கை அறுப்போம் என்று கொலை மிரட்டல் விடுத்தார். அவரது இந்த மிரட்டலுக்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. அதோடு கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத் தலைவர் மவுரியா மற்றும் 30க்கும் மேற்பட்டோர் சென்னை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அந்த புகாரில் கொலை மிரட்டல் விடுத்த ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.