பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் தனியார் பேருந்தில் நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநர் கார்த்திக் ராய் மற்றும் அவரது கூட்டாளி சுனில் குமார் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேபாளி மொழி பேசிக் கொண்டு, பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையைப் பெற்ற கார்த்திக் ராய், அவரது உதவியற்ற நிலையை பயன்படுத்தி கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முசாபர்பூரைச் சேர்ந்த கார்த்திக் ராய், ஆகஸ்ட் 4-ஆம் தேதி பாடலிபுத்ரா ரெயில் நிலையத்தில், நேபாளத்திலிருந்து வேலைக்காக வந்த பெண்ணை சந்தித்து, வேலை தருவதாகக் கூறி சுனில் குமாரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அப்பெண்ணை தனியார் பேருந்தில் ஏற்றி பாலியல் வன்கொடுமை செய்தார்.

சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் காந்தி மைதானம் அருகே அழுதுகொண்டிருந்ததை உள்ளூர் கடைக்காரர்களும், கூர்க்கா ரெஜிமென்ட் வீரர்களும் கவனித்து, கூர்க்கா சமாஜ் சமிதி தலைவர் சூரஜ் தாபாவிடம் தகவல் தெரிவித்தனர். அவர், பெண்ணை காவல்துறையில் புகார் அளிக்கச் செய்து உதவி செய்தார்.

முக்கிய குற்றவாளி கார்த்திக் ராய், மேற்கு வங்கத்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது பரானி அருகே ரெயிலில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது தகவலின் பேரில், சுனில் குமார் அவுரங்காபாத்தில் பிடிபட்டார். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பேருந்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் வேறு யாராவது தொடர்புடையவர்களா என்பதைப் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.