ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் நம்ரதா. இவர் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் கருத்தரிப்பு மையம் நடத்தி வருகிறார். இவர் குழந்தை இல்லாத தம்பதியினரிடம் சோதனை குழாய் மற்றும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று தருவதாக கூறி நம்ப வைத்தார்.
இவரை நம்பி வந்த ஒரு தம்பதியின் விந்தணு மற்றும் கரு முட்டைகளை சேகரித்து வேறொரு பெண்ணின் வயிற்றில் வளர்க்கப்படுவதாக உறுதி அளித்துள்ளார். இதற்காக அந்த தம்பதிகளிடம் இருந்து 30 முதல் 40 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார்.
மேலும் வாடகை தாய்க்கு உடல்நலம், மருத்துவ செலவு, பராமரிப்பு ஊட்டச்சத்து செலவு என 9 மாதங்களுக்கு சேர்த்து கூடுதலாக கட்டணம் வசூலித்துள்ளார். இந்த நிலையில் கருத்தரிப்பு மையத்தில் கடத்தப்படும் குழந்தைகளை வாடகைத்தாய் முறையில் பெற்றதாக கூறி மோசடி செய்வதாக தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
கருத்தரிப்பு மையத்தில் குழந்தை கடத்தும் கும்பலுடன் சேர்ந்து மொத்தம் 80 குழந்தைகளை கடத்தி வந்து குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதற்காக நம்ரதா அந்த தம்பதிகளிடமிருந்து 25 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இதனால் நம்ரதா உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
