பீகாரைச் சேர்ந்த ஒரு 23 வயது பெண், திருமணத்தின் பெயரில் ஒரு இளைஞனை ஏமாற்றி, ரூ.3 லட்சம் பெற்றுத் திருமணம் செய்து கொண்டதற்குப் பிறகு, இரவு நேரத்தில் தப்பிச் செல்ல முயன்றார். இந்த சம்பவம் ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதாவது பரத் என்ற இளைஞர், தனது தந்தையின் அறிமுகமான நந்த் கிஷோர் சோனியின் பரிந்துரையின்படி, கடந்த ஜூன் 27-ம் தேதி பீகாரைச் சேர்ந்த சுமன் பாண்டே என்பவரை மணந்தார். திருமணத்திற்கு முன், மணமகளுக்கு ரூ.3 லட்சம் செலவாகும் என கூறப்பட்டதால், பரத் குடும்பம் ரூ.1.7 லட்சம் ரொக்கமாகவும், ரூ.1.3 லட்சம் ஆன்லைனிலும் வழங்கியது.

திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, மணமகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட பரத், உண்மையை விசாரிக்கத் தொடங்கினார். சுமன் தனது முகத்தை வெளிப்படுத்தும் நேரம் வந்தது. அவர்களுக்கு இடையேயான சண்டையில், அவர் பரத்தை அறையில் பூட்டிவிட்டு தப்ப முயற்சித்தார். அவர் சேலையால் ஒரு கயிறு கட்டி, பால்கனியில் இருந்து குதித்தார். இதில் அவரது இரண்டு கால்கள் முறிந்தன.

குடும்பத்தினர் அலறியதை அடுத்து, அருகில் நின்றிருந்த சந்தீப் மற்றும் ரவி ஆகியோர் ஓட முயன்றனர். ஆனால் பரத்தின் குடும்பத்தினர் சுமனை பிடித்தனர். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் கூட, சுமன் தனது தந்தையின் பெயரை பலமுறை மாற்றியதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையில், அவர் ஏற்கனவே திருமணமானவர் எனவும், திருமணத்தின் போது சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை எனவும் தெரிய வந்தது.

இந்த வழக்கு ஜோத்பூர் பனாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பரத்தின் புகாரின் அடிப்படையில், சுமன் பாண்டே, ரூபி பாண்டே, சந்தீப் சர்மா, ரவி, நந்த் கிஷோர் சோனி மற்றும் ஜிதேந்திர சோனி ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுவரை சிலரை கைது செய்த போலீசார், மீதமுள்ளவர்களை தேடும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.