மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அமைந்துள்ள நேமாவர் சாலையில், ஒரு இருசக்கர வாகன ஓட்டுநர் ஹெல்மெட் அணியாமல், அதற்குப் பதிலாக பால் பாத்திரத்தின் மூடியை தலையில் வைத்து பெட்ரோல் நிரப்பிய வீடியோ வைரலாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர், பால் விநியோகஸ்தராக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறார். இந்த சம்பவத்தில், பம்பில் பணியாற்றிய பெண் ஊழியர் எவ்வித ஆட்சேபனையும் இல்லாமல் அவருடைய பைக்கில் பெட்ரோல் நிரப்பியதும் வீடியோவில் தெளிவாகக் காணப்பட்டது. இது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியது.
इंदौर में बिना हेलमेट के पेट्रोल नहीं मिलेगा. पेट्रोल लेने के लिए एक शख्स ने हेलमेट की जगह दूध टंकी का ढक्कन पहन लिया। वीडियो वायरल होने के बाद कलेक्टर ने पेट्रोल पंप को सील कर दिया है pic.twitter.com/mD6svtm92V
— NBT Hindi News (@NavbharatTimes) August 6, 2025
இந்த வீடியோ மாவட்ட நிர்வாகத்தினரின் கவனத்திற்குப் போனதும், அவர்கள் உடனடியாக சம்பவ இடமான ‘குமுதினி எண்டர்பிரைசஸ்’ பெட்ரோல் பம்பில் விசாரணை நடத்தினர். உதவி வழங்கல் அதிகாரி எஸ்.எஸ். வியாஸ் மற்றும் ஜூனி இந்தூர் தாசில்தார் சிவசங்கர் ஜரோலியா ஆகியோர் நேரில் சென்று சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
ஆகஸ்ட் 2ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் உண்மையானது என்றும், ஹெல்மெட் இல்லாமல் பால் பாத்திர மூடியை பயன்படுத்தியதும் உறுதிசெய்யப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து மருத்துவ சான்றிதழோ, உரிய ஆவணங்களோ எதுவும் பெறப்படவில்லை என்றும், பெட்ரோல் பம்ப் ஊழியர்கள் எந்த விதமான சரிபார்ப்பும் செய்யவில்லை என்றும் தெரியவந்தது.
இந்த அலட்சியமான செயலைக் கடுமையாக கண்டித்த மாவட்ட நிர்வாகம், அந்த பெட்ரோல் பம்பை உடனடியாக சீல் வைத்தது. இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க அனைத்து பெட்ரோல் பம்ப்களுக்கும் கண்டிப்பான வழிமுறைகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஹெல்மெட் கட்டாயம் என்பதை ஊக்குவிப்பதற்காக எடுத்த நடவடிக்கையை கேலி செய்பவர்களிடம் இனி மன்னிப்பு இல்லை எனவும், பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
