நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 5) கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் சில இடங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிக மழை ஏற்படும் இடங்களை விரிவாக குறிப்பிடுகையில், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே, பனிமய மாதா ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது.
