பாலாற்று உள்ளிட்ட ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடிய குற்றச்சாட்டுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடுமையாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அன்புமணி ராமதாஸ் தன்னுடைய தந்தையை எதிர்த்து ரத, கஜ, துரக பதாதிகளுடன் நடைபயணம் செய்து வருகிறார். அதை விமர்சிக்க நமக்கு உரிமையில்லை. ஆனால், வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டை அவர் சுமத்தியிருக்கிறார். ‘இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?’ என்று அவர் கேள்வி எழுப்பியிருப்பது வருத்தமளிக்கிறது,” எனத் தெரிவித்தார்.

அன்புமணியின் இந்த கருத்து தவறானதென்றும், அவருக்கு தேவையான விவரங்கள் இல்லாமலேயே பேசியிருப்பது வருத்தமளிப்பதாகவும் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார். “தலைவர் கலைஞர் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பணை திட்டங்களை, நான் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்றபின்னும் தொடர்ச்சியாக செயல்படுத்தி வந்துள்ளேன்.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய ஆட்சியிலும் பல்வேறு ஆறுகளில் தடுப்பணை பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன,” என தெரிவித்தார். மேலும், பாலாற்று, பொன்னையாறு, பாம்பாறு, செதுக்கரை, மட்றப்பள்ளி, ஜோன்றாம்பள்ளி, அரும்பருத்தி உள்ளிட்ட பல இடங்களில் ஏற்கனவே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதாக விவரங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய ஆண்டு மட்டும் அம்பலூர், பாப்பனபள்ளி-செங்குனிகுப்பம், அம்முண்டி, வெப்பாலை ஆகிய பகுதிகளில் தடுப்பணை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இது குறித்த தகவல்களை அறிந்த பிறகு தான் பேச வேண்டியதா என்றும் துரைமுருகன் கேட்டுள்ளார்.
“சட்டமன்றத்தில் பதிலளிக்கும்போதும், அரசுத் திட்டங்கள் குறித்து பேசும்போதும் சரியான புள்ளிவிவரங்களோடு பேசுவது அரசியல் மரியாதைக்கேற்ப இருக்கும். எனவே, இனிமேலாவது பேசுவதற்கு முன், யாராவது விவரமானவர்களிடம் சரிபார்த்துவிட்டு பேச வேண்டும்” என அவர் அன்புமணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
