முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா, பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வைத்திருந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் உள்ளார்.
இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்பு எம்.பி.யாக இருக்கும் போது மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளத்துடன் பல்வேறு வசதிகளை பெற்றவர், தற்போது சிறையில் ஒரு சாதாரண கைதியாக நடத்தப்படுகிறார். சிறை விதிகளின்படி, அவருக்கு மாதம் ரூ.540 மட்டும் சம்பளமாக வழங்கப்படும். அதுவும், சிறை அதிகாரிகள் ஒதுக்கும் வேலைகளை செய்வதற்கேற்ப வழங்கப்படும்.
பரப்பன அக்ரஹார சிறையில் அவர் நாள் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ்க்கை நடத்திக்கொண்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் காலை 6.30 மணிக்கு அவரின் நாளை தொடங்க வேண்டும். காலை உணவுக்குப் பிறகு, அதிகாரிகள் ஒதுக்கும் பணிக்கு செல்ல வேண்டும். ஆரம்பத்தில் பேக்கரி உதவியாளர், தையல் பணியாளர் போன்ற வேலைகள் ஒதுக்கப்படுகின்றன.
குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு இவ்வகை பணிகளைச் செய்த பின்பு, அவர் தகுதியோடு செயல்பட்டால் நெசவு, கொல்லர் போன்ற பணிகளுக்கு மாற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும். உணவு கட்டமைப்பிலும் நடைமுறை மாறுபாடுகள் உள்ளன. காலை மற்றும் இரவு உணவில் சாதம், சாம்பார், சப்பாத்தி, ராகி முத்தா, மோர் ஆகியவை வழங்கப்படுகின்றன.
சிறை உணவுப் பட்டியலில் வாரத்தின் செவ்வாய்க்கிழமையில் முட்டை, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் மட்டன், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் கோழிக்கறி வழங்கப்படும். கைதிகளின் மனநிலையை சமநிலைப்படுத்தும் நோக்கில் வாரத்திற்கு இரண்டு முறை குடும்பத்தினருடன் 10 நிமிடங்கள் தொலைபேசியில் பேச அனுமதி உள்ளது.
மேலும், வாரத்தில் ஒருமுறை குடும்பத்தினர் அல்லது நண்பர்களை நேரில் சந்திக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. சமீபத்தில் பிரஜ்வால் ரேவண்ணாவின் சிறைவாழ்க்கை தொடர்பான இந்த தகவல்கள் வெளிவந்ததோடு, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் இந்நிலையில் விழுந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
