இந்தியாவின் பிரபலமான வானிலை ஆய்வாளர் மற்றும் விஞ்ஞானி பேராசிரியர் சுலோச்சனா காட்கில் அவர்கள், வயது 81 , நீண்டகால உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை மாலை பெங்களூருவில் காலமானார். இவர், இந்திய பருவமழை தொடர்பான பல முக்கிய ஆய்வுகளை செய்து, உலகளவில் புகழ் பெற்றவராக இருந்தார்.
1944-ஆம் ஆண்டு புனேவில் பிறந்த சுலோச்சனா, புனேயிலேயே தனது ஆரம்பக் கல்வியையும், கணிதத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) கல்வி பெற்று, இந்தியாவிற்கு திரும்பினார். இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிய பின், இந்திய அறிவியல் நிறுவனம் (IISc)-இல் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை வானிலை மற்றும் கடல் ஆய்வுகளுக்காக அர்ப்பணித்தார்.
சுலோச்சனா அவர்களின் மறைவு இந்திய அறிவியல் உலகிற்கு பெரிய இழப்பாகும். இந்திய பருவமழை எப்படி உருவாகிறது, அதன் பரிணாமம் என்ன என்பதை விரிவாக ஆய்வு செய்து, அதனை உலக அரங்கில் எடுத்துச் சென்றவர்.அவரது கணவர் பேராசிரியர் மாதவ் காட்கில், மகன் சித்தார்த் மற்றும் குடும்பத்தினர் அவருடன் வசித்து வந்தனர்.
