ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டம், மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆன்மீக சுற்றுலா நகரமான ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

நேற்று ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் ராமேஸ்வரம் வந்தனர். அந்த வகையில் ஆந்திராவைச் சேர்ந்த 7 பேர் காரில் ராமேஸ்வரத்திற்கு வந்து புறநகர் பகுதியில் இருக்கும் ஹோட்டல் அருகே வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு 5 தங்க மோதிரம், வைரத்தோடு, பத்தாயிரம் ரூபாய் பணம், செல் போன் உள்ளிட்டவை இருந்த பையை மர்ம நபர் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.