கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (25) என்பவர் தனது சிறிய வயதில் இருந்து விஜய் என்ற நண்பருடன் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் பழகினார். இருவரும் பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தி கூலி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், சமீப காலமாக ஆகாஷ் தவறான பாதைக்கு சென்றதாக கூறப்படுகிறது. கஞ்சா விற்பனை, நகை திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் சில நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து விஜயின் பெற்றோர் தங்கள் மகனிடம் ஆகாஷுடன் தொடர்பை துண்டிக்க கூறியுள்ளனர்.
அதன்படி, விஜய் ஆகாஷுடன் பேசுவதை நிறுத்தியதால் மனமுடைந்த ஆகாஷ், “நான் என்ன தவறு செய்தேன்?” என கேட்டபோது, விஜய் நேராக “நீ செய்கிற தவறான செயல்களால் தான் பேசவில்லை” என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தொடர்ந்து ஆகாஷ் தனது நண்பனான விஜயை எதிரியாக பார்த்து வார்த்தை சண்டை, வம்பு என இடையிடையே முரண்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கோவில் திருவிழாவில் விஜய் பேனர் வைத்ததற்காகவும், அதை அகற்றுமாறு ஆகாஷ் வற்புறுத்தி சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் விஜய் தனது உறவினரை சந்திக்க ஆகாஷின் வீதியாக சென்றபோது, மது போதையில் இருந்த ஆகாஷ் அவரிடம் மீண்டும் வாக்குவாதம் செய்ததாகவும், அதை விஜய் தனது சகோதரர்களான வசந்த ராஜா, அஜித் குமார் மற்றும் நண்பர் சூர்யாவிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து ஆத்திரமடைந்த மூவரும் ஆகாஷின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்றனர். பின்னர் ஆகாஷ் அரிவாளுடன் விஜய் வீட்டுக்கு சென்று தாக்க முயற்சித்தபோது தெருவில் நின்ற ராஜா, அஜித் குமார், சூர்யா ஆகியோர் ஆகாஷை தாக்கியுள்ளனர்.
இந்த தகராறில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெருங்கிய நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
