கடலூர் மாவட்டம் பாளையங்கோட்டை கீழ்பாதி பகுதியை சேர்ந்த கிஷோர் என்ற இளைஞர், மருத்துவக் கல்விக்காக 2022-ஆம் ஆண்டு ரஷ்யா சென்றிருந்தார். அங்கு எடப்பாடியைச் சேர்ந்த நிதீஷ் என்பவருடன் பழகி இருவரும் மூன்று ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், கூடுதலாக ஒரு கொரியர் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தனர்.
இந்தநிலையில், அவர்கள் டெலிவரி செய்த பொருட்களில் ரஷ்யா தடை செய்த பொருள் இருப்பதாக கூறப்பட்டு, 2023-ஆம் ஆண்டு இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமீபத்தில், மாணவர் கிஷோர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, தனது குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் ஒரு ஆடியோ வழி கோரிக்கை விடுத்துள்ளார். அந்த ஆடியோவில், “முந்தைய இரவு என்னை அறைக்குள் பூட்டி விட்டு யாருடனும் பேச விடவில்லை. காலையில் சைன் போடச் சொன்னார்கள்.
என்னை ஏமாற்றி ஒரு பஸ்ஸில் ஏற்றிவிட்டார்கள். என்ன நடக்கப் போகிறது எனத் தெரியவில்லை. ரஷ்யன் இராணுவத்துடன் என்னை அனுப்ப முயற்சி செய்கின்றனர், தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்!” என அவர் உருக்கமாக பெசின்னார்.
கிஷோரின் பெற்றோர்கள், மகனின் உயிர் பாதுகாப்பு குறித்து கவலையில் ஆழ்ந்துள்ளனர். “எங்கள் பிள்ளை மருத்துவம் படிக்கவேண்டி கனவுடன் ரஷ்யாவிற்குப் போனான். தவறான குற்றச்சாட்டில் கைது செய்து, இப்போது போருக்கே அனுப்ப முயற்சி செய்கிறார்கள் என கிஷோரின் தாயார் கண்ணீருடன் கூறுகிறார்.
இதனைக் குறிப்பிட்டு, கிஷோரின் பெற்றோர் பிரதமர் நரேந்திர மோடியும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் உடனடியாக மாணவன் பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
