திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நர்கீஸ் என்ற இளம்பெண், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சோழவரம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றும் பாபாவின் மகனான காஜா ரவீக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்னர் நர்கீஸ் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்துடன் 30 சவரன் நகை மற்றும் ₹10 லட்சம் பணம் வழங்கி திருமணத்தை நடத்தினர்.

திருமணத்திற்குப் பிறகு வரதட்சணை கோரிக்கை தொடர்ந்து அதிகரித்து, ஒரு கட்டத்தில், வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நர்கீஸ், தனது பெற்றோரிடம் சென்று ஜமாத்து வாயிலாக புகார் கொடுத்ததும், சமாதானம் செய்து மீண்டும் கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனையடுத்து வேலூர் மாவட்டம் முல்லை நகரில் தனிக்குடித்தனம் சென்ற தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.  இதுகுறித்து நர்கீஸ் அளித்த பேட்டியில், “என்னை இரும்பு ராட்டினால் அடித்தார்… மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்படுத்தினார். என் விரல்களை காலால் மிதித்து நசுக்கினார். இதையெல்லாம் வெளியே சொல்லக்கூடாது என பூட்டிவைத்து, போனும் தரவில்லை.

ஆனால், நான் கஷ்டப்பட்டு பெற்றோரிக்கு தகவல் தெரிவித்தேன். அதை தெரிந்து கொண்ட என் கணவர் என்னை கடுமையாக தாக்கியதுடன், மாடியிலிருந்து தள்ளி விட்டதாக நர்கீஸ் கூறியுள்ளார்.

இதனால் நர்கீஸின் இரு கால்கள், இடுப்பு உள்ளிட்ட பகுதிகள் முற்றாக முறிந்துவிட்டன. இடது கால் தூளாகி விட்டதாகவும், கணவர் இரத்தம் பெருகி கிடக்கும் தருணத்தில் சிரித்தபடி பார்த்து நின்றார் என கூறுகிறார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது போதாதென, மருத்துவமனையில் கூட கணவர், மாமியார் இருவரும் வந்து, “எதுவுமே வெளியே சொல்லக்கூடாது, இல்லையெனில் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம்… உன் பெற்றோர்களையும் கொன்றுவிடுவோம்… என மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது மருத்துவ படுக்கையில் இரு கால்களும் இழந்து தவிக்கும் நர்கீஸ், தமிழக அரசிடம் தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.