நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோயில் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சபரீஷ்வரன்(23) என்ற மாணவன் பிசியோதெரபி பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபரீஸ்வரன் வகுப்பறையில் இருந்த போது திடீரென கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்களும் பேராசிரியர்களும் உடனடியாக சபரிஸ்வரனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சபரீஷ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மாணவனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர்.

மேலும் சபரீஸ்வரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். எனவே சபரீஷ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கல்லூரிக்கு சென்றுள்ளனர். அங்கு கல்லூரி வளாகத்தின் நுழைவுப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் சபரீஸ்வரனின் உறவினர்களை கல்லூரி வளாகத்தில் உள்ள அனுமதிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த சபரீஷ்வரனின் உறவினர்கள் தங்களை கல்லூரி வளாகத்தினுள் அனுமதிக்குமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது  அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு சபரீஸ்வரன் உறவினர்கள் மற்றும் மாணவர் சங்கத்தினர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின்பு போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.