திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் கோபி(46). இவர் கடந்த 2011 -ஆம் ஆண்டு சுத்தமல்லி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

எனவே பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ்  கோபியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றதில், கோபிக்கு இந்திய தண்டனைச் சட்டம் 376 படி 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதம் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஆதிதிராவிட வகுப்பினை சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 32 படி மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 6000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 417 ன் படி குற்றவாளி கோபி ஒரு வருட சாதாரண சிறை தண்டனையும், அதன் பின்பு வருகிற காலத்தில் 20 ஆண்டுகால சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

இந்த ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் நடந்த 2 பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 3 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.