திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் கோபாலகிருஷ்ணன். இவர் சம்பவ நாளன்று தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவரை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அந்த சிறுவனுக்கு தெரிந்த ஒரு பெண்ணுடைய இன்ஸ்டாகிராம் ஐடியை குறித்து கேட்டுள்ளார். ஆனால் அந்த சிறுவன் அதை கொடுக்க முடியாது எனக் கூறியதால் கோபமடைந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது இரு நண்பர்கள் சேர்ந்து அந்த மாணவரை அடித்து தாக்கியுள்ளனர்.

அதில் மாணவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த மாணவர் அளித்த புகாரின் பேரில் திசையன்விளை காவல் துறையினர் கோபாலகிருஷ்ணன் உட்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.