தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து பயணிகளிடம் ஒரு சிறுவன் டிக்கெட் செக்கிங் செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளன. பொதுமக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்த நிலையில், அந்த சிறுவன் ஏன், எந்த அதிகாரத்துடன் இந்நேரத்தில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன.
பயணிகளிடம் அவர் கேட்ட பதில்களும், பக்கத்தில் நின்ற கண்டக்டரின் அலட்சியமான பதிலும் இந்த விவகாரத்தில் மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில், அந்த சிறுவன் பயணிகளிடம் டிக்கெட்டை கேட்டு செக் செய்வதும், ஒரு பயணியிடம் அவர் கேட்ட கேள்விக்கு “நீங்க ஏன் இதெல்லாம் கேட்கிறீங்க?” என பதிலளிப்பதும் காணப்பட்டது.
அப்போது அருகில் இருந்த அரசு பேருந்து கண்டக்டர், “இவர் எனக்கு மேல இருக்குற அதிகாரி” என ஏடாகூடமாக பதில் கூறுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து, “ஒரு சிறுவனை அரசு பேருந்தில் டிக்கெட் செக்கிங்கிற்கு யார் அனுப்பினார்கள்?”, “இது போக்குவரத்து துறையின் அலட்சியா?” எனத் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளின் எக்ஸ் பக்கங்களை டேக் செய்து, பலர் கேள்வி எழுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது அரசு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த நிகழ்வு 14.07.2025 அன்று ஆத்தூர் பேருந்து நிலையத்தில் நடந்ததாகவும், வீடியோவில் காணப்படும் நபர் தொழிற்பயிற்சி (Apprentice) பயிற்சியில் இருக்கும் பயிலாளர் ஆவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக உடனடியாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அந்த பயிற்சி பயிலரை இவ்வாறு பணியில் ஈடுபடுத்திய அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கூடுதல் தகவல்களாக, அரசுப்பேருந்துகளில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தொழில் பழகுநர்களாக சேர்க்கப்படுவது வழக்கம். இவர்கள் பயிற்சியின் ஒரு பகுதியாகவே வெளியுறவு பணிகளில் ஈடுபடுவர்.
ஆனால் டிக்கெட் செக்கிங் போன்று பயணிகள் தொடர்பான முக்கியமான பொறுப்புகளை ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களிடம் ஒப்படைப்பது தவறு என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் போக்குவரத்து துறை கடும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
