ஜார்க்கண்ட் மாநிலத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமலுக்கு வரவுள்ளது. இதன் படி, இதுவரை அரசு நேரடியாக ஒதுக்கீடு செய்து வந்த மதுக்கடைகள் இப்போது ஆன்லைன் குலுக்கல் முறையில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மதுபான கையிருப்புகளை கணக்கீடு செய்ய கலால்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தான்பாத் மாவட்டத்தில் மதுக்கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு 802 மதுபான பாட்டில்கள் விற்பனை கணக்கில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. அதனைப் பற்றி விசாரித்த அதிகாரிகளுக்கு கடை ஊழியர்கள் அளித்த பதில் திகைப்பூட்டுவதாக இருந்தது. “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்களின் மூடிகளை எலிகள் தின்றுவிட்டு, உள்ளே உள்ள மதுவை குடித்து விட்டன” என்றனர் ஊழியர்கள்!

இந்த பதிலை கேட்ட கலால்துறை அதிகாரிகள் நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, ஊழியர்களிடம் இதுபோன்ற முட்டாள்தனமான காரணங்களை ஏற்க முடியாது என கடுமையாக கண்டித்து, 802 பாட்டில்களுக்கும் பணம் செலுத்த உத்தரவிட்டனர். “அரசு முழு பாட்டில்களை ஒப்படைத்திருக்கிறது… அதேபோல் அதே அளவு பாட்டில்கள் அல்லது அதன் பணத்தை திருப்பி வழங்கவேண்டும்” என கூறி, அபராதமும் விதித்தனர்.

இது தொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாத்தியோ விமர்சனம் வெளியிட்டு, “இது எலிகளின் வேலை அல்ல. இது அரசின் ஊழலை மறைக்க செய்யப்படும் நாடகம். இது போன்ற பொய் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோல், முன்பும் 10 கிலோ பாங்கு மற்றும் 9 கிலோ கஞ்சா ‘எலிகள் சாப்பிட்டுவிட்டன’ என்ற செய்தி வந்ததைக் நினைவில் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. நீதிபதி, “எலிகள் மதுபானத்தை குடித்தன” என்ற காரணம் அபத்தமானதும், ஏற்றுக்கொள்ள முடியாததும் எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். மேலும், விபரீதமான இப்போக்குகள் குறித்து தெளிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஜார்க்கண்டில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவது அரசுத் துறைகளில் உள்ள முறைகேடுகளுக்கும், கணக்கீடு தவறுகளுக்கும் ஒரு எதிரொலியாகவே பார்க்கப்படுகிறது. ‘எலிகள்’ என்ற பெயரில் தொடர்ந்து மதுபானங்களும், போதைப்பொருட்களும் மாயமாகும் நிலை, பொதுமக்களிடையே கேள்விக்குறியாக உள்ளது.