ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 32-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் போஸ்னியா அணிகள் மோதவுள்ள நிலையில், போஸ்னியா நாடு குறித்து அமெரிக்கத் தொலைக்காட்சியின் பெண் செய்தி நிருபர் ஒருவரின் அலட்சியமான பேச்சு உலக அளவில் கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது. ஏபிசி7  தொலைக்காட்சியின் செய்தியாளரான அபிகாயில் வெலெஸ் , நேரலையின் போது நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்து, “போஸ்னியா எங்கே இருக்கிறது என்று வரைபடத்தில் கூட என்னால் அடையாளம் காட்ட முடியாது” என்று சாதாரணமாகக் குறிப்பிட்டார்.

விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் இந்த பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், போஸ்னியா நாட்டின் கால்பந்து கூட்டமைப்பும், சமூக வலைத்தளப் பயனர்களும் அவருக்கு எதிராகத் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். தனது பேச்சு எல்லை மீறிச் சென்று, உலகளாவிய அளவில் எதிர்ப்புகளைச் சம்பாதித்ததை அடுத்து, செய்தியாளர் அபிகாயில் வெலெஸ் தனது செயலுக்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேரலையில் தான் பேசிய கருத்துக்கள் முற்றிலும் முறையற்றவை என்றும், போஸ்னியா நாட்டு மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் நோக்கில் அவை அமைந்திருந்ததை ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு பன்னாட்டு விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக, சக நாட்டை அவமதிக்கும் வகையில் அமைந்த இந்த அலட்சியப் பேச்சுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தற்சமயம் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.