மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தரி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சகோதரர்களின் வீடுகளில் கடந்த நான்கு மாதங்களாக எந்தவித காரணமும் இன்றி மர்மமான முறையில் தீ விபத்துகள் ஏற்பட்டு வருவது ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்யாண் சிங் பாகேல் மற்றும் அவரது சகோதரர்களான சேவாராம், காம்தா பிரசாத், மகேந்திரா, லாகிராம் பாகேல் ஆகியோரின் வீடுகளில் உள்ள உணவு தானியங்கள், ஆடைகள், படுக்கைகள் மற்றும் கால்நடை தீவனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலாகி வருகின்றன.

ஆரம்பத்தில் இதனை செய்வினை அல்லது மாந்தீரிகம் என்று நம்பிய கிராம மக்கள், மாந்தீரிகவாதிகளை அணுகியும் தீ கட்டுக்குள் வராததால், தற்போது மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் இதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக இந்த மர்ம தீ விபத்துகள் மிகவும் தீவிரமடைந்து, ஒரு நாளில் பலமுறை வீடுகள் திடீரென தீப்பற்றி எரிகின்றன. இந்த சம்பவங்களின் போது வீடுகளில் சமையல் எரிவாயு பயன்பாட்டில் இல்லை என்பதும், மின்சார ஷார்ட் சர்க்யூட் எதுவும் ஏற்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களின் எஞ்சிய பொருட்களைப் பாதுகாப்பதற்காக அண்டை வீட்டாரின் வீடுகளில் கொண்டு போய் வைத்தபோதும், அந்தப் பொருட்களும் திடீரென தீப்பற்றி எரிந்தது கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வீடுகளுக்குள் தூங்குவது ஆபத்தானது என்பதால், குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளியில் இரவைக் கழித்து வருகின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள அதிகாரிகள், நிலத்தடி வாயு கசிவு, ரசாயன எதிர்வினைகள் அல்லது மின்சாரக் கோளாறுகள் காரணமாக இந்த தீ விபத்துகள் ஏற்படுகிறதா என்பது குறித்து மின்சாரத் துறை மற்றும் தடயவியல் குழுவினர் மூலம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.