உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற விபரீத மோகத்தால், வாலிபர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், வழியில் இறந்து கிடந்த நச்சுப் பாம்பு ஒன்றை எடுத்துள்ளார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் சமூக வலைத்தளங்களில் லைக்குகளையும், பார்வைகளையும்  குவிப்பதற்காக, அந்தச் செத்த பாம்பை தனது வாய்க்குள் திணித்து கடிப்பது போலவும், அதை வைத்து விளையாடுவது போலவும் ஆபத்தான முறையில் வீடியோ எடுத்துள்ளார்.

 

இந்த விபரீத விளையாட்டின் போது, அந்தப் பாம்பின் உடலில் எஞ்சியிருந்த வீரியமிக்க விஷம்  எதிர்பாராதவிதமாக அவரது வாயின் வழியே உடலுக்குள் சென்றுள்ளது. வீடியோ எடுத்து முடித்த சில நிமிடங்களிலேயே அந்த வாலிபர் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாம்பின் விஷம் உடல் முழுவதும் வேகமாகப் பரவியதால், வாலிபரின் உடல்நிலை மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளானது. உடனே அவரை மீட்ட அங்கிருந்தவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையிலும், அவரது நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லைக்குகளுக்காகவும், சமூக ஊடகப் புகழுக்காகவும் இளைஞர்கள் தங்கள் உயிரையே பணையம் வைத்து இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாகவும், இதற்குப் பெற்றோர்களும் சமூகமும் உரிய விழிப்புணர்வுடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.