சென்னை ராஜ் நிவாஸ் வளாகத்தில் கடந்த ஜூலை 13ம் தேதி நடைபெற்ற தேசிய மருத்துவ தின விழாவில், சிறந்த மருத்துவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சான்றிதழ்கள் வழங்கினார்.
ஆனால் அதில் 944வது திருக்குறள் என “செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு” எனும் வரிகள் திருவள்ளுவர் பெயருடன் அச்சிடப்பட்டிருந்தது. இந்த குறள், திருவள்ளுவர் எழுதிய 1330 திருக்குறள்களில் இடம்பெறாதது என்பதால், இது பொய்யான குறள் என கல்வியாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

திருக்குறளைத் தவறாக குறிப்பிடும் பிழை, அதுவும் ஆளுநர் ஏற்பாடு செய்த நிகழ்வில் நிகழ்ந்திருப்பது குறித்து பல்வேறு எதிர்வினைகள் உருவாகியுள்ளன. ஏற்கனவே தமிழ் மொழி மற்றும் திருக்குறளின் மீது ஆளுநர் ஆர்வம் கொண்டவர் என தனது பேச்சுகளில் பலமுறை கூறி வந்தார் ஆர்.என். ரவி. அந்த வகையில், திருக்குறளில் இல்லாத வரியை திருவள்ளுவர் எழுதியதாக கூறி பரிசுகளிலும் பதிவு செய்தது பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையைக் குலைக்கும் செயல் எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.
இதையடுத்து, இந்த பிழையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் மாளிகை, நிகழ்வை ஏற்பாடு செய்த அமைப்பினர் சார்பில் பிழையுள்ள கேடயங்களை திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய கேடயங்கள் வழங்கப்படும் என விளக்கமளித்துள்ளது.
எனினும், ஒரு மாநில ஆளுநரின் மேடையில், தமிழரின் பெருமைமிக்க இலக்கியமான திருக்குறளை தவறாக பயன்படுத்தியது குறித்து முக்கியமான கவனக்குறைவு மற்றும் சிந்தனையற்ற செயலாக தமிழறிஞர்களும் சமூக வட்டாரமும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
